தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெங்களூரு: சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 400 கட்டடங்களை இடிக்க உத்தரவு

1 mins read
c64946b5-0f3f-405c-8d5c-e2663651fc7d
அனுமதியின்றிக் கட்டப்பட்ட ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்ததை அடுத்து, அனுமதியற்ற கட்டுமானத்தைத் தடுக்கும் பணிகளை பெங்களூரு மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. - படம்: ஊடகம்

பெங்களூரு: அனுமதியற்ற கட்டுமானத்தைத் தடுக்கும் நோக்கில், மகாதேவபுரம் பகுதியில் மட்டும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட கட்டடங்களை இடிக்க பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் அப்பகுதியில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

அதனையடுத்து, பாதுகாப்பு குறித்து குரல்கள் எழ, சட்டவிரோதக் கட்டுமானத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெங்களூரு நகர் முழுவதும் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள 2,000க்கும் அதிகமான கட்டடங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஆக அதிகமாக, மகாதேவபுரம் பகுதியில் மட்டும் 402 கட்டடங்கள் அனுமதியின்றிக் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அக்கட்டடங்களில் இருப்போர் அங்கிருந்து வெளியேறுமாறு அல்லது அவற்றை இடிக்கும்படி அவற்றின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அறிவிப்புக் கடிதங்களை வழங்கியுள்ளது.

அத்துடன், மகாதேவபுரத்தில் கட்டப்பட்டு வரும் 24 கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

‘மின்விநியோகம் துண்டிக்கப்படும்’

இதற்கிடையே, விதிமீறிக் கட்டப்படும் கட்டடங்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்படும் என்று பெங்களூரு மின்விநியோக நிறுவனம் (பெஸ்காம்) தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், உள்ளாட்சி அமைப்புகள், ஆணைபெற்ற அமைப்புகள், பெங்களூரு மாநகராட்சி போன்ற அமைப்புகள் கேட்டுக்கொண்டால் மட்டுமே மின்விநியோகத்தை பெஸ்காம் துண்டிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மின்விநியோகத்தைத் துண்டிப்பது தொடர்பில் பயனீட்டாளர்களுக்கு ஏழு நாள்களுக்குமுன் தெரிவிக்கப்படும் என்றும் பெஸ்காம் வெளியிட்ட சுற்றறிக்கை கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்