விஜயவாடா: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலுங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குப் பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.
தெலுங்குத் திரைத்துறையினரும் இவர்களில் அடங்குவர்.
இந்நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகரும் ஆந்திர மாநிலத் துணை முதல்வருமான பவன் கல்யாண், முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை வெள்ள நிவாரணப் பணிக்காக வழங்கியுள்ளார்.
முன்னதாக, நடிகர் பிரபாஸ் தெலுங்கானா- ஆந்திரா பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கினார்.
குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென கனமழை பெய்தது.
தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் முக்கியச் சாலைகளை மூழ்கடித்தது. இதில் பேருந்துகளும் கனரக வாகனங்களும் வெள்ளத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு இடங்களில் பேருந்து நிலையங்களுக்குள் மழை நீர் புகுந்ததால், பேருந்துச் சேவைகள் நிறுத்தப்பட்டன.
நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில்,30க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக, விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடாவுக்கு பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் பெய்துவரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அந்த மாநில முதல்வர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.