பாட்னா: பீகார் மாநிலத்தில் பொருளியல் ரீதியாக வசதி படைத்தவர்களும் வருமான வரி செலுத்துபவர்களும் தங்களுக்கு வழங்கப்படும் 125 யூனிட் இலவச மின்சாரச் சலுகையைத் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சாம்ராட் சௌத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அம்மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற ‘பாடலிபுத்ரா தேசிய இளையர் நாடாளுமன்றம் 2.0’ நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் சாம்ராட் சௌத்ரி, மாநில அரசு மின் மானியத்திற்காக ஆண்டுதோறும் ஏறக்குறைய ரூ.23,000 கோடி செலவிடுவதாகக் குறிப்பிட்டார். சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை அரசு செலவிடுகிறது.
தற்போது அனைத்துத் தரப்பினருக்கும் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வசதி படைத்தவர்கள் இச்சலுகையை விட்டுக்கொடுப்பதன் மூலம் கிடைக்கும் தொகையை, மாநிலத்தின் கட்டமைப்பு வளர்ச்சி, கல்வி மேம்பாட்டிற்குப் பயன்படுத்த முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதிலும் இளையர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் திரு சௌத்ரி சுட்டிக்காட்டினார்.
பீகாரில் கடந்த 1974ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களில் இளையர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய ஜென்-ஸீ தலைமுறையினரும் நாட்டின் வளர்ச்சிப்பாதையில் இணைந்து பங்காற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
