பாட்னா: பீகார் அரசு உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வட்டியில்லாக் கல்விக்கடன் வழங்கவுள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் பீகார் அரசு மாணவர்களுக்குக் கல்விக்கடன் வழங்கி வருகிறது.
தற்போது மாணவர்களுக்கு 4 விழுக்காடு வட்டி விகிதத்திலும், மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு 1 விழுக்காடு வட்டி விகிதத்திலும் ரூ.4 லட்சம்வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது.
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வட்டியில்லாக் கல்விக்கடன் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
முன்னதாக ரூ. 2 லட்சம் வரையிலான கடனை 60 மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். இது தற்போது அதிகபட்சமாக 84 மாதாந்திர தவணைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.2 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்குத் திருப்பிச் செலுத்தும் காலம் 84 மாதத் தவணைகளிலிருந்து அதிகபட்சமாக 120 மாதத் தவணைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்வதே தனது அரசின் நோக்கம் என்று குறிப்பிட்ட நிதிஷ் குமார், இது மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்கும். அவர்கள் அதிக உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் உயர்கல்வியைத் தொடர உதவும் என்றார்.