பாட்னா: கொடிய நஞ்சுள்ள கட்டுவிரியன் பாம்பு கொத்தியபோதும் சற்றும் தளராத ஆடவர், அதனைப் பிடித்தபடி மருத்துவமனைக்குச் சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்தியாவின் பீகார் மாநிலம், பாகல்பூரில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
பிரகாஷ் மண்டல் என்ற அந்த ஆடவர், அப்பாம்பின் வாயை இறுகப் பிடித்தபடி, அதனைத் தன் கழுத்தில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்.
அதனைக் கண்ட மருத்துவர்களும் நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
மண்டல் உடனே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்த பலரும் அவரது செயலைத் தங்களது கைப்பேசிகளில் காணொளியாகப் பதிவுசெய்தனர்.
அங்கிருந்த ஆடவர் ஒருவர், மண்டலைப் பாதுகாப்பாக தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சென்றதும் மண்டல் செய்த இன்னொரு செயலும் மற்றவர்களை வியக்க வைப்பதாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
தமது வலக்கையில் பாம்பை இறுக்கமாகப் பிடித்தபடி, மண்டல் தரையில் படுத்துவிட்டார்.
நோயாளி படுக்கையில் இருந்தபோதும் அவர் பாம்பை விடாமல் பிடித்திருந்ததை இன்னொரு காணொளி காட்டியது. வலியால் துடித்தபோதும் பாம்பு தன் பிடியைவிட்டு நழுவிவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்ததுபோல் தெரிந்தது.
பாம்பைப் பிடித்தபடியே இருந்தால் சிகிச்சை அளிப்பது கடினம் என்று மருத்துவர் கூறிய பிறகே, மண்டல் பாம்பை விட்டார். அவரது உடல்நிலை குறித்து தெரியவில்லை. ஆனாலும், அவர் இன்னும் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.


