புதுடெல்லி: இந்திய அரசின் உயர்கல்விக்கான உச்சநிலை ஒழுங்குமுறை ஆணைய (விக்சித் பாரத் ஷிக்ஷா அதிஷ்டான்) மசோதாவில் இடம்பெற்றுள்ள ஒருசில அம்சங்களுக்கு, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களும் எதிர்க்கட்சியினரும் சில கல்வி அமைப்புகளும் ஆட்சேபனை தெரிவித்துள்ளன.
அந்த மசோதா உயர்கல்வி ஒழுங்குமுறை மீதான அதிகாரங்களை மையப்படுத்தும் என்று அவை இணை நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளன.
பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம், தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் ஆகியவற்றைக் கலைத்துவிட்டு விபிஎஸ்ஏ என்னும் ஒற்றை உச்சநிலை அமைப்பை நிறுவ மசோதா பரிந்துரைக்கிறது.
அவ்வாறு நிறுவுவதன் மூலம் இந்தியாவில் உயர்கல்வி ஒழுங்குமுறையில் கட்டமைப்பு ரீதியிலான சீரமைப்பை மேற்கொள்ள இயலும் என அது தெரிவிக்கிறது.
தற்போது அந்த மசோதா பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் டி. புரந்தேஸ்வரி தலைமையிலான கூட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனையில் உள்ளது.
மாநில அரசுகளைத் தவிர, மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் அந்தக் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கைகளில் மசோதா மீதான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.
வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) மசோதா தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றக் குழு வெளியிட உள்ள நிலையில், அதன் மீதான ஆட்சேபனைகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
பொது ஒழுங்குமுறை அமைப்பில், முழு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசக் கல்வி முறையையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு சுழற்சி உறுப்பினர் புதிய ஆணையத்தில் இடம்பெற்றிருப்பது பற்றிய விமர்சனத்தை ஆந்திரப் பிரதேச அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அவ்வாறு இருப்பது அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கொள்கைச் சட்டம், தேசிய தொழில்நுட்பக் கல்விக் கொள்கைச் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழங்கப்படும் மாநிலப் பிரதிநிதித்துவத்திலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தும் என்பது அதன் கருத்து.

