சென்னை: பாஜகவுடன் சுமுக உறவு கொண்டிருக்கும் முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டுத் திருமண விழாவில் தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் தவறாமல் கலந்து கொண்டதால் தமிழநாட்டு அரசியல் கூட்டணியில் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் இடையில் நடைபெற்ற வாக்குவாதம் காரணமாக, 2024ஆம் ஆண்டில் அவற்றுக்கு இடையேயான கூட்டணி முறிந்தது. இதில் பிரதமர் மோடி, அமித் ஷா தலையிட்டுப் பேசிய பிறகும் கூட்டணி முறிந்ததாகவே எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில் மார்ச் 3ஆம் தேதி கோவையில் நடைபெற்ற எஸ் பி வேலுமணி மகன் திருமணத்தில் கே ஏ செங்கோட்டையன், பி தங்கமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் தனது நெருங்கிய உறவைப் புலப்படுத்தும் விதமாக அவர்களுடன் பேசினார் அண்ணாமலை.
வேலுமணியும், இது அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டு திருமணமா பாஜக முன்னாள் அமைச்சர் வீட்டு திருமணமா என்று வியக்குமளவுக்கு பாஜக தலைவர்களின் கூட்டத்தையே கூட்டி இருந்தார். தனக்கு இருக்கும் சங்கடத்தை வெளிக்காட்டாமல் தவிர்க்க இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், அவரது மனைவியும் மகனும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கருத்துரைத்த அதிமுக முக்கியப் பிரமுகர்கள் ஆரம்பத்திலிருந்தே எஸ்.பி.வேலுமணி பாஜக கூட்டணி தேவை என்ற மனநிலையில்தான் இருக்கிறார் என்றும், இப்போது அவரோடு செங்கோட்டையன், தங்கமணி ஆகியோரும் இணைந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஜெயக்குமார், கே பி முனுசாமி போன்றோர் தவிர முன்னாள் அமைச்சர்கள் பலரும் பாஜகவுடன் கூட்ட்ணி என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
இத்தனைக்குப் பிறகும் பாஜகவை பழனிசாமி ஒதுக்கினால் அதன் பிறகு வேலுமணி போன்றோருடன் பாஜக புதுக் கூட்டணி அமைக்கலாம். இதையெல்லாம் தெரிந்ததால்தான், எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான் என்று எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.