மும்பை: மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 24 மாநகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது.
மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து இடங்கள் மட்டுமே கிடைத்தன. அக்கட்சி சார்பில் ஐந்து பேர் மேயர்களாகப் பதவி ஏற்பார்கள் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 15ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மறுநாள் வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்கம் முதல் பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வந்தது.
இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் என்று குறிப்பிடப்படும் மும்பை மாநகரின் ‘பிருகன்மும்பை’ மாநகராட்சியும் பாஜக வசமானது.
இதேபோல் கடந்த பல ஆண்டுகளாக சிவசேனா கட்சி வசம் இருந்த மாநகராட்சிகளிலும் பாஜக வெற்றி பெற்றது.
இந்நிலையில், காங்கிரஸ் வெற்றி பெற்ற லாத்தூர், சந்திரபூர், கோலாப்பூர், பர்பனி, பிவண்டி ஆகிய ஐந்து மாநகராட்சிகளில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தற்போது இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது என்று திரு ஹர்ஷவர்தன் சப்கல் கூறினார்.
“ஐந்து பெரிய நகரங்களில் எங்கள் கட்சிக்கு மேயர்கள் இருப்பார்கள். மேலும், உள்ளாட்சிப் பகுதிகளில் 350 இடங்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருப்பர். அத்துடன், 10 மாநகராட்சிகளின் ஆட்சி அதிகாரத்தில் எங்கள் கட்சியும் ஒரு பகுதியாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்,” என்றார் திரு ஹர்ஷவர்தன்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வெற்றி காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு உரியது என்ற அவர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

