பாட்னா: பாஜகவின் துரோக அரசியல் விரைவில் தோற்கப் போகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பீகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதில் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழியும் நேற்று (ஆகஸ்ட் 27) கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஸ்டாலின், நியாயமாக, முறைப்படி, வாக்குப்பதிவு நடந்தால் பாஜக தோற்றுவிடும் என்பதால் மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாக குற்றஞ்சாட்டினார்.
“தேர்தல் ஆணையத்தை சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள். 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை.
“சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதைவிட, பயங்கரவாதம் இருக்க முடியுமா?,” என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.
அனைத்து அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்களையும் முகவரி இல்லாதவர்கள் போன்று மாற்றுவது அழித்தொழிப்பு நடவடிக்கை எனக் குறிப்பிட்ட அவர், இண்டியா கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியாத பாஜக, கொல்லைப்புற வழியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடிகளை அம்பலப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் முறையான ஒரு பதிலைக்கூட சொல்ல முடியாமல் தவிப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
“தலைமைத் தேர்தல் ஆணையரின் மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி அஞ்சமாட்டார். அவரது வார்த்தைகளிலும் கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது. அவர் அரசியலுக்காக பெரிய மேடை உள்ளது என்பதற்காகப் பேசுபவர் அல்ல.
தொடர்புடைய செய்திகள்
“ பாஜக தேர்தல் நடைமுறையை எப்படி கேலிக்கூத்தாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில்தான் பாஜகவினர் அவர் மேல் பாய்கிறார்கள்,” என்று ஸ்டாலின் கூறினார்.
மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பாஜகவின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள் என்று குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தி ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வழக்கறிஞராகச் செயல்படுவதாகத் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் நடைப்பனணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.