காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடிப்பு; ஒன்பது பேர் உயிரிழப்பு, 32 பேர் காயம்

2 mins read
30f79558-40dd-4b48-b925-e3bd7c80b737
காவல் நிலைய வெடிப்பில் மாண்டோருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 4

புதுடெல்லி: இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பில் ஒன்பது பேர் மாண்டனர்; 32 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) இரவு 11.20 மணியளவில் நிகழ்ந்தது. இந்தத் தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்கள் அந்தக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மாநிலப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒருவர், தடயவியல் துறையினர் மூவர், நிழற்படக் கலைஞர்கள் இருவர், வருவாய்த் துறையினர் இருவர், தையற்காரர் ஒருவர் ஆகியோர் மாண்டவர்களில் அடங்குவர்.

காயமுற்றோரில் காவல்துறையினர் 27 பேர், வருவாய்த்துறை அதிகாரிகள் இருவர், பொதுமக்களில் மூவர் அடங்குவர். அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மரண எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வெடிப்பு காரணமாகப் பல வாகனங்கள் தீப்பிடித்தன. வெடித்துச் சிதறிய உடல்கள் கிட்டத்தட்ட 300 மீட்டர் தொலைவிற்கு அப்பால் விழுந்தது. வெடிப்புச் சத்தத்தை 15 கிலோமீட்டருக்கு அப்பால் வசிப்போரும் உணர்ந்ததாகக் கூறப்பட்டது.

இதனிடையே, இந்த வெடிப்பு தற்செயலாக நேர்ந்தது என்றும் மற்ற எந்த ஊகமும் தேவையற்றது என்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத் தலைமை இயக்குநர் நளின் பிரபாத் தெரிவித்துள்ளார்.

“அண்மையில் ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களை ஆய்வுசெய்வதற்காக அவற்றின் மாதிரிகளைத் தடயவியல் அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் சேகரித்துக்கொண்டிருந்தனர். மிகுந்த கவனத்துடன் அவற்றைக் கையாண்டபோதும் எதிர்பாராதவிதமாக வெடிப்பு நேர்ந்துவிட்டது,” என்று திரு பிரபாத் விவரித்தார்.

இம்மாதம் 10ஆம் தேதி இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அதில் குறைந்தது எட்டுப் பேர் மாண்டனர். அந்தச் சம்பவத்தை இந்திய அதிகாரிகள் பயங்கரவாதத் தாக்குதல் என்று வகைப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, காஷ்மீரில் நிகழ்ந்த வெடிப்பு குறித்து விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்