தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொளுத்தும் வெயில்; பள்ளி நேரத்தை மாற்றியமைக்க பெற்றோர்கள் கோரிக்கை

1 mins read
c4ee9e64-c9e2-4fad-9f67-b9aea9a5c247
வெயில் காரணமாக நீர்வளம் குன்றியுள்ளதால் ஹமீர்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறது.  - மாதிரிப்படம்

ஹமீர்பூர்: வெயில் கொளுத்துவதால் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம், ஹமீர்பூர் நகரவாசிகள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

வழக்கமான பாட அட்டவணையின் அடிப்படையில் அங்கு காலை 9 மணிக்கே பள்ளிகள் தொடங்குவதாக எனக் குறிப்பிட்ட ஒரு மாணவரின் தந்தையான ரோஷன் லால், அதனை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹமீர்பூரில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை ஒட்டிப் பதிவாவதால் பிற்பகலில் தங்கள் பிள்ளைகள் வெப்பத் தாக்கத்தால் பாதிப்படையக்கூடும் எனப் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கோடைக்காலத்தில் காலை 7 அல்லது 7.30 மணிக்குத் தொடங்கி, நண்பகல் 12 அல்லது 12.30 மணிவரை வகுப்புகளை நடத்தலாம் என்று அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்பில் முடிவெடுக்க உதவி ஆணையர்களுக்கு மாநில அரசு ஏற்கெனவே அதிகாரம் வழங்கியுள்ளது.

வெயில் காரணமாக தங்கள் பிள்ளைகளுக்குத் தலைச்சுற்றலும் உடல்நலக்குறைவும் ஏற்படுவதாகவும் குறிப்பாக பாலர் பள்ளி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் கூறினர்.

இந்நிலையில், நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் கல்வித் துறையிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வெயில் காரணமாக நீர்வளம் குன்றியுள்ளதால் ஹமீர்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறது.

“வரும் வாரத்தில் மழை பெய்யவில்லை எனில், குடிநீர்த் திட்டங்கள் பலவும் கடுமையாகப் பாதிக்கப்படும்,” என்று நீர்த்துறைப் பேச்சாளர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்