சிம்லா: உலகின் ஆக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் சோன்ஜின் அங்மோ.
இவர் இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில், இந்தியா - திபெத் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் சாங்கோ என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
முதுநிலை பட்டப்படிப்பை முடித்த இவர், கண்பார்வையற்றவர். வங்கி வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் பணியாற்றுகிறார்.
சோன்ஜின் அங்மோவுக்குத் தற்போது 29 வயதாகிறது. பள்ளியில் 8 வயதில் மூன்றாம் வகுப்பு படித்தபோது பார்வை இழந்தார்.
எனினும் அவர் படிப்பை மட்டும் நிறுத்தவில்லை. தீவிர முயற்சியால் கல்லூரியில் சேர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
பார்வை இழந்துவிட்டாலும், தன்னம்பிக்கையை இழக்காத சோன்ஜின்னுக்கு மலையேற்றம், தடகளத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு.
கடந்த 10 ஆண்டுகளாக மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர், அண்மையில் உலகின் ஆகப்பெரிய எவரஸ்ட் சிகரத்தில் ஏறி, சாதனை படைத்துள்ளார்.
29,000 அடி உயரத்தில் தமது குழுவினருடன் இந்திய தேசியக்கொடியைப் பறக்கவிட்ட அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வியத்தகு சாதனையைப் படைத்த, இந்தியாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண் என்ற பெருமை சோன்ஜின்னுக்குக் கிடைத்துள்ளது.
மேலும், உலக அளவில் இச்சாதனையைப் புரிந்த ஐந்தாவது பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண் என்ற சாதனையையும் இவர் ஒருசேரப் படைத்துள்ளார்.