‘பிஎல்எஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சிம் லிம் டவரிலும் ஏன்சன் சாலையிலும் நடத்திவரும் இந்தியத் தூதரகச் சேவை விண்ணப்ப நிலையங்கள் இரண்டும் தொடர்ந்து சேவைகளை வழங்கிவரும் எனச் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் தன் சமூக ஊடகப் பக்கங்கள் வழியாகத் தெரிவித்துள்ளது.
தான் எந்தப் புதிய அறிவிப்பையும் வெளியிடாதவரை ‘பிஎல்எஸ்’ தொடர்ந்து அச்சேவைகளை வழங்கும் எனத் தூதரகம் கூறியுள்ளது.
தற்போது நீக்கப்பட்டுள்ள அறிவிப்பில் சென்ற வாரம், ‘அலங்கிட் அசைன்மன்ட்ஸ்’ (Alankit Assignments) எனும் நிறுவனம் இரு புதிய, இந்தியத் தூதரகச் சேவை விண்ணப்ப நிலையங்களைத் திறக்கும் எனத் தூதரகம் அறிவித்திருந்தது.
இப்புதிய விண்ணப்ப நிலையங்கள் தி பென்கூலன் ஆஃபீஸ் டவரிலும் ஐஓபி கட்டடத்திலும் செயல்படும் என்றும் அக்டோபர் 1 முதல் இந்தியத் தூதரகச் சேவைகளுக்கு அங்குதான் செல்லவேண்டும் என்றும் தூதரகம் அறிவித்திருந்தது. ‘பிஎல்எஸ்’ நிறுவனம் செப்டம்பர் 30ஆம் தேதி வரையே அச்சேவைகளை வழங்கும் என்றும் அது அப்போது தெரிவித்திருந்தது.
வழக்கால் ஏற்பட்ட திருப்பம்
ஆனால், அலங்கிட் அசைன்மன்ட்ஸ் இயக்குநர் அங்கித் அகர்வால்மீது நீதிமன்ற வழக்கு இருப்பதாகத் தமிழ் முரசு அறிகிறது.
அது தொடர்பாக, அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் அடுத்த நீதிமன்ற விசாரணைவரை ‘அலங்கிட் அசைன்மன்ட்ஸ்’ இந்தியத் தூதரகச் சேவைகளை வழங்கக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்தியத் தூதரக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில், “விண்ணப்பிக்கும் நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலோ அதன்மீது குற்ற விசாரணை/வழக்கு இருந்தாலோ அந்நிறுவனம் எவ்விதக் காரணமுமின்றி தகுதிநீக்கம் செய்யப்படும். ஒப்பந்தம் வழங்கப்பட்டபின் அத்தகைய தகவல் தூதரகத்துக்குத் தெரியவந்தால் ஒப்பந்தம் ரத்துசெய்யப்படலாம்,” என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 2021ல் அலங்கிட் நிறுவனங்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில் திரு அங்கித் அகர்வால்மீதான விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை என அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதனால், ‘பிஎல்எஸ்’ நிறுவனமே தற்போதைக்கு இந்தியத் தூதரகச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கிவரும் என்பது தமிழ் முரசுக்குக் கிடைத்த தகவல்.
இந்நிலையில், “நான் அலங்கிட் அசைன்மன்ட்ஸ் இணையத்தளத்தில் கட்டணம் செலுத்தி, நேரில் வர முன்பதிவு செய்துள்ளேன். நான் என்ன செய்வது?” என ஃபேஸ்புக் வழியாக ஒருவர் கேட்டுள்ளார்.
இவ்வாண்டிலிருந்து ‘அலங்கிட் அசைன்மன்ட்ஸ்’ ஜெர்மனியிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கான சேவைகளை நான்கு ஜெர்மானிய நகரங்களில் - ஃபிராங்க்ஃபர்ட், பெர்லின், ஹம்பர்க், மியூனிக் - வழங்கிவந்துள்ளது. இந்த வழக்கால் அதன் ஜெர்மானியச் சேவைகள் பாதிப்படையுமா என்பது தெரியவில்லை.