2025 முற்பாதியில் இந்தியாவில் பிஎம்டபிள்யூ விற்பனை 10% கூடியது

2 mins read
cc29f270-bf4a-4d31-82eb-de2443c142da
மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட 7,774 கார்களில், 7,477 பிஎம்டபிள்யூ கார்களும் 297 மினி (MINI) கார்களும் அடங்கும். - பிஸ்னஸ் டைம்ஸ்

புதுடெல்லி: பிஎம்டபிள்யூ குழுமம் 2025 முற்பாதியில் இந்தியாவில் அதன் விற்பனையில் 10% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்நிறுவனம் மொத்தம் 7,774 கார்களை விற்பனை செய்தது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 7,081 கார்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

இந்த வளர்ச்சிக்கு, ‘ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெஹிக்கிள்ஸ்’ (SAVs) மற்றும் நீண்ட வீல்பேஸ் (long-wheelbase) மாடல்களுக்கான வலுவான தேவையே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆடம்பர மின்சார வாகனச் சந்தையில் பிஎம்டபிள்யூ குழுமம் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது.

2025 முற்பாதியில் பிஎம்டபிள்யூ மற்றும் மினி (MINI) மின்சார வாகனங்களில் ஆண்டு அடிப்படையில் 234% குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அந்நிறுவனம் கண்டுள்ளது. மொத்தம் 1,322 அத்தகைய கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு பெரிய முன்னேற்றமாகும். மேலும் இது, உயர்தர மின்சார கார்களுக்கான மக்களின் விருப்பத்தைக் காட்டுகிறது.

மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட 7,774 கார்களில், 7,477 பிஎம்டபிள்யூ கார்களும் 297 மினி கார்களும் அடங்கும்.

சவாலான சூழலிலும் வலுவான வளர்ச்சியை நிறுவனம் காண்பதாக இந்தியாவின் பிஎம்டபிள்யூ குழுமத் தலைவரும் அதன் தலைமை நிர்வாகியுமான விக்ரம் பவா தெரிவித்தார்.

மின்சார வாகனப் போக்குவரத்து மீதான நிறுவனத்தின் கவனம், ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

எஸ்ஏவி, செடான் (sedan) மாடல்களில் நீண்ட வீல்பேஸ் கொண்ட பிஎம்டபிள்யூ ஆடம்பர மாடல்களுக்கு அதிக தேவை இருப்பதையும் திரு பவா குறிப்பிட்டார்.

இவற்றில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், 5 சீரிஸ், 3 சீரிஸ், ஐஎக்ஸ்1 ஆகியவை அடங்கும்.

ஒவ்வொரு பிரிவிலும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய இந்த மாடல்களை நிறுவனம் தனது தயாரிப்புத் தொகுப்பில் உத்திபூர்வமாக நிலைநிறுத்தியுள்ளது.

2025 முற்பாதியில், செடான் வகைகளில் அதிக விற்பனையான மாடலாக பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் இருந்தது. மொத்த விற்பனையில் இது கிட்டத்தட்ட 20% பங்கு வகிக்கிறது.

இந்திய பிரீமியம் செடான் பிரிவில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் தொடர்ந்து முன்னிலை வகித்தது, அதே நேரத்தில், நிறுவனத்தின் எஸ்ஏவி மாடல்கள் இந்தக் காலகட்டத்தில் 17% இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தன.

எக்ஸ்1 மாடல், பிஎம்டபிள்யூவின் அதிகம் விற்பனையாகும் எஸ்ஏவி மட்டுமல்லாமல், இந்தியாவின் பிரீமியம் காம்பேக்ட் பிரிவில் விற்பனைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

குறிப்புச் சொற்கள்