தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பையில் படகு விபத்து; பலர் உயிரிழப்பு

2 mins read
82fb4471-7154-47f0-9e3c-caec1200115a
விபத்துக்குப் பிறகு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் அந்நாட்டுக் கடற்படைப் படகு ஒன்றும் பயணிகள் படகு ஒன்றும் மோதிக்கொண்டதில் குறைந்தது 13 பேர் மாண்டுவிட்டனர்.

இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவரும் கடற்படை ஊழியர்கள் இருவரும் மாண்டோரில் அடங்குவர்.

இந்தியக் கடற்படையின் ‘ஸ்பீட்போட்’ எனப்படும் அதிவேகப் படகு ஒன்று, புதன்கிழமை (டிசம்பர் 18) பிற்பகல் 100க்கும் அதிகமான பயணிகள் இருந்த படகின் மீது மோதியது. அதிவேகப் படகு சோதனை மேற்கொண்டபோது அது ‘நீல் கமல்’ என்ற பெயரைக் கொண்டுள்ள பயணிகள் படகின் மீது மோதி விபத்து நேர்ந்தது.

மும்பை நீர்முகப்பில் இருக்கும் ‘கேட்வே ஆஃப் இந்தியா’ பகுதியிலிருந்து எலிஃபன்டா தீவுக்கு ‘நீல் கமல்’ சென்றுகொண்டிருந்தது. ஜவஹர் துவீப் என்றழைக்கப்படும் புட்சர் (Butcher) தீவில் அப்படகு கவிழ்ந்தது. ஜவஹர் துவீப், ‘கேட்வே ஆஃப் இந்தியா’ பகுதியிலிருந்து 8.25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி ‘நீல் கமல்’ பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்பட்டது. பிற்பகல் 3.55 மணிக்கு விபத்து நேர்ந்தது.

மும்பைவாசிகள் அல்லாதோரும் அப்படகில் பயணம் செய்தனர். சிலர் முதன்முறையாக மும்பைக்கு வருகை தந்தவர்கள் என்று இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் குறிப்பிட்டன.

பிற்பகல் நான்கு மணிக்கு ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தின் (JNPA) கப்பல் ஒன்றில் இருந்தவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு 56 பயணிகளை மீட்டனர். அந்தக் கப்பல் சம்பவ இடத்துக்கு அருகே இருந்தது.

சிறிது நேரம் கழித்து சில தனியார் கப்பல்கள் மற்றும் கடற்படை, கடலோரக் காவல்படை, கடல் காவல்படை ஆகியவை இணைந்து ஒன்றாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய கடற்படைப் படகின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது இந்தியக் கடற்படையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அறியப்படுகிறது.

மகாரா‌ஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இந்தியக் கடற்படையும் இன்னொரு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்