லக்னோ: மகா கும்பமேளாவின் போது கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்ததையடுத்து, படகோட்டிகள் பெரும் லாபம் சம்பாதித்துள்ளதாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
படகோட்டிகளில் பலர் நாள்தோறும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் வருவாய் ஈட்டியதாக அம்மாநில சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது அவர் குறிப்பிட்டார்.
கும்பமேளாவின்போது படகு ஓட்டுநர்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாடி குற்றம் சாட்டியது. அதற்குப் பதிலளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், “படகு ஓட்டுநர் ஒருவரின் கதையை உங்களுக்குச் சொல்கிறேன்.
“அவரிடம் மொத்தம் 130 படகுகள் உள்ளன. கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் அவர்கள் ரூ. 30 கோடி லாபம் ஈட்டியுள்ளனர்.
“ஒவ்வொரு படகிலிருந்தும் நாள்தோறும் ரூ.50,000 முதல் ரூ.52,000 வரை சம்பாதித்தது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு படகும் ரூ.23 லட்சம் சம்பாதித்துக் கொடுத்தது,” என்றார்.