பெங்களூரு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (மே 18) இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் சிக்கிக்கொண்ட குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற, மீட்புப் பணியாளர்கள் படகுகளைப் பயன்படுத்த நேரிட்டது.
ஞாயிற்றுக்கிழமை பெய்த மழை இந்த ஆண்டில் இதுவரை பெய்ததில் ஆக மோசமானதாகக் கருதப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ள படங்களும் காணொளிகளும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து டிராக்டர்கள், படகுகள் மூலம் மக்கள் வெளியேறுவதைக் காட்டுகின்றன.
ஏரியைப்போல் காட்சியளிக்கும் ‘மன்யதா டெக் பார்க்’
பெங்களூரின் ஆகப் பெரிய தகவல் தொழில்நுட்ப, வர்த்தக நடுவங்களில் ஒன்றான ‘மன்யதா டெக் பார்க்’ வெள்ளம் சூழ்ந்ததில் ஏரியைப்போல் காட்சியளிக்கிறது. அந்த வட்டாரத்தில் இரண்டு அடி அளவு மழை நீர் தேங்கி நிற்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பன்னாட்டு நிறுவனங்களும் தகவல் தொழில்நுட்பப் பெருநிறுவனங்களும் அமைந்துள்ள அப்பகுதியிலிருந்து நீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அடுத்த இரண்டு நாள்களுக்கு மேலும் கனமழை பெய்யக்கூடும் என்று முன்னுரைத்த வானிலை நிலையம் பெங்களூரு உட்பட கர்நாடகாவின் சில பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்தடை ஏற்படக்கூடும் என்றும் சில இடங்களில் பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாயக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

