ஹைதராபாத்: இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்திற்கு வரவிருந்த மூன்று விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அவற்றுள் இரு விமானங்கள் ஐரோப்பாவிலிருந்து வரவிருந்தவை.
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பிஏ 277, ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து கிளம்பிய லுஃப்தான்சா எல்எச் 752 விமானம், கேரளத்தின் கண்ணூரிலிருந்து புறப்பட்ட இண்டிகோ 6இ 7178 விமானம் ஆகியவையே அம்மூன்று விமானங்கள் என்று பிடிஐ செய்தி தெரிவித்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டபோதும் அம்மூன்று விமானங்களும் எந்த இடையூறுமின்றித் தங்கள் பயணத்தை முடித்தன.
அனைத்துலக விமானங்கள் இரண்டும் திங்கட்கிழமை அதிகாலையில் தரையிறங்கின.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரகால நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட விமானங்களைத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்துதல், பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் தீவிரச் சோதனைக்கு உட்படுத்துதல், தீயணைப்பு, மீட்புக் குழுக்களைத் தயார்நிலையில் வைத்திருத்தல், விமானங்களையும் சுற்றுப்பகுதிகளையும் மோப்பநாய் மூலம் சோதித்தல் ஆகியவை அந்நடைமுறைகளில் அடங்கும்.
சோதனைகளில் சந்தேகப்படும்படி எதுவும் சிக்காததால் அந்த வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளிதான் எனத் தெரியவந்தது.
ஆயினும், மிரட்டல் மின்னஞ்சல்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

