புதுடெல்லி: இந்தியாவில் ஏர் ஆகாசா மற்றும் இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என்று தெரியவந்தது.
செவ்வாய்க்கிழமை இரவு டெல்லியில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் அவசரமாக அகமதாபாத்தில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் 200 பயணிகள் பயணித்தனர்.
புதன்கிழமை டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்ட ஏர் ஆகாசா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மீண்டும் விமானம் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது. இந்த விமானத்தில் 184 பேர் பயணித்துள்ளனர்.
கடந்த 3 நாட்களில் இந்தியாவில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான போக்குவரத்து அமைச்சு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக சத்தீஷ்காரை சேர்ந்த தந்தை, மகனுக்கு மும்பை காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கடந்த 14ஆம் தேதி (திங்கட்கிழமை) மும்பையில் இருந்து புறப்பட்ட 3 அனைத்துலக விமானங்களுக்கு மர்ம நபர்கள் ‘எக்ஸ்’ வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதில் நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், டெல்லியை நோக்கி திருப்பி விடப்பட்டது. அதேபோல், இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நீண்ட நேரம் தாமதத்திற்கு பிறகு புறப்பட்டுச் சென்றன.
இந்த மிரட்டல்கள் போலியானவை என்பது அதிகாரிகளின் சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இணையக் குற்றத் தடுப்பு காவல்துறையின் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராஜ்னந்த்கான் பகுதியில் இருந்து ‘எக்ஸ்’ தளத்தில் மிரட்டல் பதிவு வெளியிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சத்தீஷ்கார் மாநிலத்திற்கு விரைந்த மும்பை காவல்குறை ராஜ்னந்த்கான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அவனது தந்தை இருவருக்கும் அழைப்பாணை அனுப்பியுள்ளனர். அந்த சிறுவனின் தந்தையுடைய ‘எக்ஸ்’ வலைதள கணக்கில் இருந்துதான் மிரட்டல் பதிவு வெளியாகி இருப்பதாகவும் காவல்துறை கூறியது.

