வாக்குவாதத்தில் கொல்லப்பட்ட சிறுவன்; ஆடவர் கைது

2 mins read
4fc15c27-1699-42ef-a510-2d063ddb908f
ஆடவர் ஆத்திரத்தில் மரக் கம்பைக் கொண்டு சிறுவனின் தலையில் அடித்ததாகக் கூறப்படுகிறது. - படம்: பிக்சாபே

புதுடெல்லி: சிறுவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து அச்சிறுவனை 33 வயது ஆடவர் தாக்கிக் கொன்றதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது.

கிழக்கு டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் 15 வயதுடைய சிறுவன் தமது எட்டு வயது அண்ணன் மகனுடனும் இன்னொரு நண்பனுடனும் நவம்பர் 19ஆம் தேதி நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அருகிலிருந்த கோவிலுக்கு மூவரும் சென்றுகொண்டிருந்தபோது, ஆடவருடன் மோதல் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

தற்செயலாகக் கீழே விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட மரணம் என்று ஆரம்பத்தில் இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டது. இருப்பினும், சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் உடன் இருந்த அந்த எட்டு வயது அண்ணன் மகன் அளித்த விவரங்கள் அடிப்படையில் விசாரணை திசை மாறியது.

ஆனந்த் விஹார் காவல் நிலையத்தைச் சேர்ந்த குழு இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளது.

தனக்கும் சிறுவனுக்கும் வாய்ச்சண்டை மூண்டதாக கைதான முகம்மது வாகீல் ஆலம் வக்கில் என்ற ஆடவர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். சிறுவர்கள் சென்றுகொண்டிருக்கும் இடம் குறித்து தான் கேட்டதாகவும் பதிலுக்கு அவர்கள் தகாத சொற்களைச் சொன்னதாகவும் சந்தேக நபர் கூறியதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்து மரத்தால் ஆன கம்பு ஒன்றைக் கையில் எடுத்து சிறுவனின் தலையில் ஓங்கி அடித்ததாக ஆடவர் குறிப்பிட்டார். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரத்தக் கறை படிந்த அந்தக் கம்பு உள்பட தடயவியல் ஆதாரங்கள் யாவும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கைதான ஆடவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்