புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடைவிதிக்க பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இத்தகைய உறுதியான நடவடிக்கைகளைப் பாராட்டுவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை அதற்கான சட்டவிரோத நிதிகள் நாடு கடந்த குற்றவலைப் பின்னல்களைத் தடுக்க இந்தியா உதவும் என ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
சில தனிநபர்களும் நிறுவனங்களும் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறினார்.
பிரிட்டன் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை சட்டவிரோத நிதி பரிமாற்றங்களையும் நாடுகடந்த குற்றக் கும்பல்களின் செயல்பாடுகளையும் தடுக்க உதவும் என்றார் அவர்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் இங்கிலாந்துடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்ற இருப்பதாக திரு ஜெய்ஸ்வால் கூறினார்.
பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கையானது, பயங்கரவாத அமைப்புகளின் நிதித் திரட்டல், பிரசார நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அனைத்துலக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அண்மையில் எல்லையில் நடந்த மோதலின்போது ஆப்கான் குடிமக்கள் பலர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திரு ஜெய்ஸ்வால், ஆப்கானிஸ்தான் மக்கள் மீதான இத்தகைய தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதாகக் கூறினார்.
மேலும், ஆப்கானிஸ்தானின் வட்டார ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத்தை வலுவாக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மியன்மார் தேர்தல் குறித்தும் திரு ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, மியன்மாரின் ஜனநாயக மாற்றத்தை இந்தியா ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார். மியன்மாரில் அமைதி, உரையாடல், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பாகிஸ்தானில் நிகழும் ஒவ்வோர் அசைவையும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட திரு ஜெய்ஸ்வால், ஜனநாயகமும் பாகிஸ்தானும் ஒன்றாக இணைந்திருக்கவே முடியாது என்றும் சொன்னார்.

