சவுதி அரேபியா: சவுதியில் மதீனாவுக்கு அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
நவம்பர் 9ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு, மெக்காவில் உம்ரா தொழுகை முடித்துவிட்டு மதீனாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, அதிகாலை 1.30 மணியளவில் முஃப்ரிஹாத் அருகே டீசல் லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் வெளியேற முடியாமல் பலர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “மதீனாவில் இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களுக்கு ரியாத் தூதரகமும் ஜெட்டா துணைத் தூதரகம் முழு ஆதரவு அளித்து வருகின்றன,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெட்டாவில் உள்ள இந்தியத் தூதரகம் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்து, தகவல் அறிய கட்டணமில்லா உதவி எண்ணை (8002440003) வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ, தெலுங்கானா அரசு டெல்லி அதிகாரிகள், தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறது.

