தீவிபத்தில் சிக்கிய பேருந்து; குளிரூட்டி வெடித்து 9 பேர் உயிரிழப்பு

தீவிபத்தில் சிக்கிய பேருந்து; குளிரூட்டி வெடித்து 9 பேர் உயிரிழப்பு

பயணி: தீயில் இருந்து தப்பிப்பதே என் ஒரே நோக்கமாக இருந்தது
படம்: என்டிடிவி

24 Sep 2026 - 4:43 pm

2 mins read

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள யமுனா நெடுஞ்சாலையில் புதன்கிழமை (செப்டம்பர் 23) இரவு, தூங்கியபடி செல்லக்கூடிய சுற்றுலாப் பேருந்து ஒன்றில் திடீரெனத் தீப்பற்றியதில் ஒரு பெண் உட்பட குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் மஹோபா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்தில் ஏறக்குறைய 35 பயணிகள் பயணம் செய்ததாகத் தெரிகிறது.

தீ விபத்துக்கான காரணம்

காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில், பேருந்தின் குளிரூட்டும் அமைப்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே தீ விபத்து நேரிட்டதாகத் தெரியவந்துள்ளது. அந்த வெடிப்பைத் தொடர்ந்து, இயந்திரத்தில் தீப்பற்றிக்கொண்டதால் வாகனம் முழுவதும் மிக வேகமாகத் தீ பரவியது.

சம்பவம் நடந்தபோது பயணிகளில் பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரெனப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பதற்றமும் குழப்பமும் நிலவியது. தப்பிக்க வழி தெரியாமல் சிலர் பேருந்தின் சன்னல்கள் வழியாக வெளியே குதித்தனர்.

தகவலறிந்ததும், ஜேவார் காவல் நிலைய அதிகாரிகளும் தீயணைப்புப் படையினரும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடியும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் எனப் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

காயமடைந்தவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட யோகி ஆதித்யநாத், மாநில அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

கதவைத் தட்டியதால் விழித்த பயணி

“யாரோ கதவைத் தட்டியபோதுதான் எனக்கு விழிப்பு வந்தது. நான் எழுந்தபோது புகையும் கூட்டமுமாக இருந்தது. என்னுடைய பொருள்களைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை; தீயில் இருந்து தப்பிப்பதே என் ஒரே நோக்கமாக இருந்தது.

“காலணிகளைக் கூட அணியாமல் கைப்பேசியை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வர முயன்றேன். புகை சூழ்ந்திருந்ததால் எதுவுமே தெரியவில்லை. சிலர் நெரிசலில் சிக்கிக்கொண்டனர். சிலர் என்னை வெளியே இழுத்தனர்; அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு நினைவில்லை,” என்று சம்பவத்தில் உயிர் தப்பிய பயணி ஒருவர் கூறினார்.

பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்