இரிட்டி (கேரளம்): பள்ளி மாணவியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாத தனியார்ப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் உரிமங்கள் ஒரு மாத காலத்திற்கு ரத்துசெய்யப்பட்டன.
இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், இரிட்டியில் நடந்தது.
பெரும்பரம்பையைச் சேர்ந்த அம்மாணவி, இரிட்டி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்தபின் வீடு திரும்புவதற்காக, இரிட்டி-ஸ்ரீகந்தபுரம் இடையே இயக்கப்படும் ‘விமல்’ பேருந்தில் அவர் ஏறினார்.
ஆனால், பெரும்பரம்பையில் இறங்க வேண்டிய அவரை, பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் மூன்று கிலோமீட்டர் தள்ளி, ஆள்நடமாட்டமற்ற இடத்தில் இறக்கிவிட்டனர்.
இதுகுறித்து அம்மாணவி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் ஹரீந்திரன், நடத்துநர் லிஜு இருவரின் உரிமங்களையும் ஒரு மாதகாலத்திற்குத் தற்காலிகமாக ரத்து செய்து, இரிட்டி வட்டாரப் போக்குவரத்துத் துணை அலுவலர் உத்தரவிட்டார்.