சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2ஆம் தேதி மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிற்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது.
திருமாவளவனின் மாநாடு குறித்து பாஜக தரப்பும் விமர்சனம் செய்திருந்தது. இதற்கு, திமுக தரப்பினர், திருமாவளவன் திமுகவுக்கு எதிராகச் செயல்பட மாட்டார் என்பதுபோல பதிலளித்திருந்தனர்.
மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய காணொளியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் ‘எக்ஸ்’ பக்கத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) பதிவேற்றப்பட்டு உடனே அகற்றப்பட்டது.
“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்,” என்று பதிவிட்டு அந்த காணொளியில், கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிகாரத்தில் அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் என்று திருமாவளவன் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியான காணொளி பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
சனிக்கிழமை காலை, அமெரிக்க பயணத்தை நிறைவு செய்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பிய நேரத்தில், எக்ஸ் தளத்தில் இந்தக் காணொளி பதிவிடப்பட்டது.
இது குறித்து ஊடகங்களில் 11.30 மணியளவில் செய்தி வெளியானது.
ஆனால் அந்தக் காணொளி வெளியானது பற்றி தமக்குத் தெரியாது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

