புதுடெல்லியில் பரபரப்பு: தமிழர்கள் குடியிருப்புப் பகுதியை இடித்த அதிகாரிகள்

2 mins read
dbe423af-a2d7-499e-b38a-c49a74da410c
மதராஸி குடியிருப்புகளை இடிக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: இந்தியத் தலைநகரில் இருக்கும் தமிழர்கள் குடியிருப்புப் பகுதியை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஜூன் 1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இடித்தனர்.

இதனால், அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

புதுடெல்லி ஜங்புரா பகுதியின் மதராசி குடியிருப்பில் இருக்கும் தமிழர்களின் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்ற அம்மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

700க்கும் மேலான குடும்பங்கள் பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகின்றன. குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையைப் புதுடெல்லி அரசு கைவிட வேண்டும் எனக் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

புதுடெல்லி தலைமைச் செயலகம் நோக்கி அவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்திய போதிலும் அவர்களுடைய கோரிக்கைகளுக்குப் புதுடெல்லி அரசாங்கம் செவி கொடுக்கவில்லை.

அவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடம் அவர்கள் தற்போது வசிக்கும் இடத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி பாதிக்கும், பணிக்குச் செல்வோர் தங்கள் வேலையை இழக்க நேரிடும் போன்ற காரணங்களால் மதராசி குடியிருப்பை அகற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மதராஸி குடியிருப்பாளர்கள் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்ப விரும்பினால் அனைத்து உதவிகளும் செய்யப்படுமெனவும் வாழ்வாதாரம், தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படுமெனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவர்களுக்குத் தேவையான உதவிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம்மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அது அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்