புதுடெல்லி: காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இந்திய தூதரக அதிகாரிகள் சிலரைக் காணொளி மூலம் கனடா கண்காணித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
கனடாவின் இந்தச் செயலுக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்தியாவைக் குறிப்பிடத்தக்க இணைய அச்சுறுத்தலாக கனடாவின் 2025/2026 ஆண்டுக்கான தேசிய இணையத் தாக்குதல் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை அடையாளப்படுத்துகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
கனடாவுக்கு எதிராக இந்தியா இணையத் தாக்குதல் நடத்தும் எனக் கனடா கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும் உலக அரங்கில் இந்தியாவைத் தவறாக சித்திரிக்க அந்நாடு முயற்சிக்கிறது என்றும் புதுடெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய வெளியுறவு பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
மேலும், தூதரக அதிகாரிகளின் கைப்பேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் அவர்களின் நடவடிக்கைகள் காணொளி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கனடாவின் இதுபோன்ற செயல்கள் தூதரக ஒப்பந்தத்தை மீறியதாக உள்ளன என்றும் இவை இரு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் திரு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
மேலும், தீபாவளியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியைக் கனடா எதிர்க்கட்சித் தலைவர் ரத்து செய்தது சகிப்பின்மையின் உச்சகட்டம் எனக் கூறிய அவர், கனடாவில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இக்குற்றச்சாட்டை இந்தியா வன்மையாகக் கண்டித்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், கனடாவில் உள்ள காலிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து வன்முறை, உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார் என்று கனடா வெளியுறவு துணை அமைச்சர் டேவிட் மோரிசன் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.