தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா சென்ற கனடிய வெளியுறவு அமைச்சர்: யார் இந்த அனிதா ஆனந்த்?

2 mins read
c8adac01-2fe8-4f21-90e2-7ebaf345e6bf
கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் அக்டோபர் 17ஆம் தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவை தான் அவரது பூர்வீகம் எனத் தெரியவந்துள்ளது.

தமது பயணம் இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த உதவும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவை அடுத்து சிங்கப்பூர், சீனாவுக்கும் தாம் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இந்தோ-பசிபிக் நாடுகளுக்கும் அவற்றின் பொருளியலுக்கும் நம்பகமான பங்காளியாக கனடாவை மாற்றுவதற்காக தாம் பாடுபடப் போவதாகவும் அனிதா கூறியுள்ளார்.

அவர் மும்பைக்குச் சென்று, இரு நாடுகளிலும் முதலீடு, வேலைவாய்ப்பு, பொருளியல் உறவுகளை வலுப்படுத்த கனடா மற்றும் இந்திய நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

யார் இந்த அனிதா?

கனடிய வெளியுறவு அமைச்சராக உயர் பொறுப்பில் உள்ள அனிதா ஆனந்த் தமிழகத்தைச் சேர்ந்த தந்தை, பஞ்சாபைச் சேர்ந்த தாயாருக்குப் பிறந்தவர். தற்போது 57 வயதாகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர்தான் திருவாட்டி அனிதாவின் பூர்வீகம். இவரது தந்தைவழி தாத்தா சுதந்திரப்போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் ஆவார்.

தந்தை ஆனந்த், ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர். அம்மா சரோஜ் மயக்க மருந்து நிபுணராக இருந்தவர்.

கடந்த 2019ஆம் ஆண்டு கனடா தேர்தலில் வெற்றிபெற்று, அப்போதைய கனடிய பிரதமர் ட்ரூடோ அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட அனிதா, அச்சமயம் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரேனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நீதித்துறை படிப்பையும் டெரோன்டோ பல்கலையில் முதுநிலை சட்டப்படிப்பையும் முடித்துள்ள இவர், கடந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குவார் என பரபரப்பு எழுந்தது. அதை திருவாட்டி அனிதா திட்டவட்டமாக மறுத்த நிலையில், தற்போது கனடாவின் வெளியுறவு அமைச்சராகி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்