நடப்புக்கு வந்த புற்றுநோய் மருந்து உச்சவரம்பு விலை

நடப்புக்கு வந்த புற்றுநோய் மருந்து உச்சவரம்பு விலை

பயனீட்டாளருக்கு ஆண்டுக்கு ரூ.3,540 கோடி மிச்சம்
கோப்புப் படம்: ஆக்ஸ்பாம்

09 Nov 2026 - 6:15 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் 1,364 புற்றுநோய் மருந்து வகைகளுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆர்பி) திங்கட்கிழமை (நவம்பர் 9) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. விநியோகக் கட்டமைப்பிலுள்ள அதிகப்படியான வணிக லாப வரம்பைக் கட்டுப்படுத்தியதன் மூலம் நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ. 3,540.38 கோடி வரை மிச்சமாகும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சின் சுகாதாரச் சேவைகள் தலைமை இயக்குநரக வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின்படி 137 பட்டியலிடப்படாத புற்றுநோய் மருந்துகளின் வணிக லாப வரம்பை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) முறைப்படுத்தியது.

புற்றுநோய் மருந்துகளை 30 விழுக்காடு லாப வரம்புக்குள் மட்டுமே விற்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏறக்குறைய 85 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் 121 மருந்துகளுக்கு உட்பட்ட 1,364 மருந்து வகைகளுக்கான குறைக்கப்பட்ட விலைப் பட்டியலைச் சமர்ப்பித்துள்ளன. 679 வணிகப் பெயர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாகக் குறைக்கப்பட்ட விலை ரூ.96.45. அக்டோபரில் 500க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் விலை திருத்தப்பட்ட நிலையில் 543 மருந்துகளுக்கான புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.

மார்பகப் புற்றுநோய்க்கான பால்போசிக்லிப் (Palbociclib) ரூ.40,421லிருந்து ரூ 2,720 ஆகவும் தியோடெபா கீமோதெரபி ஊசி ரூ. 80,072லிருந்து ரூ. 7,150 ஆகவும் பெருமளவு சரிந்துள்ளன. டசாடினிப் ரூ 17,811லிருந்து ரூ.1,808 ஆகவும், பெர்டுசுமாப் ரூ. 94,951லிருந்து ரூ.30,593 ஆகவும், அனஸ்ட்ரோசோல் ரூ. 695-லிருந்து ரூ. 73 ஆகவும் குறைந்துள்ளன.

இருபதுக்கும் மேற்பட்ட புற்றுநோய்களுக்கான நோயெதிர்ப்புச் சிகிச்சை மருந்துகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளன. எனினும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கீட்ரூடா, இம்ஜூடோ, ஒப்டிவோ போன்ற காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலையில் மாற்றமில்லை.

மருந்தகங்களோ, மருத்துவமனை மருந்தகங்களோ புதிய எம்ஆர்பியை விடக் கூடுதல் விலை வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருந்துகளின் விலையை ‘பார்மா சாஹி தாம்’ (Pharma Sahi Daam) செயலி அல்லது nppa.gov.in இணையத்தளத்தில் சரிபார்க்கலாம். கூடுதல் விலை வசூலித்தால் ‘பார்மா ஜன் சமாதான்’ இணையத்தளம் அல்லது 1800-111-255 கட்டணமில்லா உதவி எண் மூலம் புகார் அளிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்