நாட்டின் நலனுக்கே முன்னுரிமை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜெய்சங்கர்

நாட்டின் நலனுக்கே முன்னுரிமை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜெய்சங்கர்

2 mins read
3df7639a-976d-4624-8c98-8bb0a42e431f
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மார்ச் 25ஆம் தேதி நடந்தது. - படம்: பிடிஐ

புதுடெல்லி: அமெரிக்கா ஆதரவுடன் ஈரான்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று மார்ச் 25ஆம் தேதி நடந்தது.

அப்போது, மத்திய கிழக்குப் போரை நிறுத்த இந்தியா ஏன் சமரசப் பேச்சில் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

மேலும், ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தான் சமரசப் பேச்சு நடத்தி வருவதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் அவை விவாதித்தன.

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இந்தியா ஒன்றும் பாகிஸ்தானைப் போலத் தரகர் வேலை பார்க்கும் நாடு அல்ல,” எனக் காட்டமாகப் பதிலளித்ததாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாகிஸ்தான் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவது ஒன்றும் புதிதன்று எனக் கூறிய அவர், 1981ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு தகவல் பரிமாற்றக் கருவியாகப் பாகிஸ்தான் இருந்து வருவதை அவர் சுட்டினார்.

அனைத்துத் தரப்புடனும் (அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான்) நேரடியாகப் பேசக்கூடிய தனித்துவமான நிலையில் இந்தியா உள்ளதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் தலைவர்கள் ஆகியோரிடம் போர் நிறுத்தத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தி வருவதாகவும் திரு ஜெய்சங்கர் விவரித்தார்.

இந்த விவகாரத்தில் இந்தியா அமைதியாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது. ஈரானியத் தூதரகத்தில் இரங்கல் குறிப்பில் கையெழுத்திட்டது முதல், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கச் செய்தது வரை இந்தியா தொடர்ந்து அரசதந்திர ரீதியாகச் செயல்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கலந்துகொண்டு இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கினர்.

காங்கிரஸ் சார்பில் தாரிக் அன்வர், சமாஜ்வாடி கட்சியின் தர்மேந்திர யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்