மும்பை: விமானக் கழிவறையில் புகைபிடித்த இந்தியர்மீது மும்பைக் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஃபசல் முகம்மது பிலக்கூல், 26, என்ற அந்த ஆடவர் கிறிஸ்துமஸ் நாளன்று அபுதாபியிலிருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார்.
விமானப் பயணத்தின்போது பிலக்கூல் அதிகாலை 3 மணியளவில் கழிவறைக்குச் சென்றதாகவும் பின்னர் அவர் தமது இருக்கைக்குத் திரும்பியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கழிவறையிலிருந்து கடுமையான சிகரெட் நெடி வீசியதை விமான ஊழியர்கள் உணர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பிரத்திமா என்ற பெண் ஊழியர் கழிவறையைச் சோதித்தபோது, அதனுள்ளே ஒரு சிகரெட் துண்டு இருந்ததைக் கண்டுபிடித்தார். அது குறித்து பிலக்கூலிடம் விமான ஊழியர்கள் கேட்டபோது, கழிவறையில் புகைத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
புகைபிடிப்பது தொடர்பான பொருள்களை ஒப்படைக்கும்படி ஊழியர்கள் கேட்க, ஆறு சிகரெட்டுகள் இருந்த சிகரெட் பெட்டியை அவர் ஒப்படைத்தார்.
சம்பவம் குறித்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் மும்பையில் தரையிறங்கியதும் பிலக்கூல் இண்டிகோ விமான நிறுவனப் பாதுகாவல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, மும்பை சாகர் காவல் நிலையத்தில் பிலக்கூல்மீது இண்டிகோ நிறுவனம் புகாரளித்தது. அதனடிப்படையில் காவல்துறை அவர்மீது வழக்கு பதிந்து, அதற்கான அறிவிப்புக் கடிதத்தை அவரிடம் வழங்கியது.


