விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி மீது வழக்கு

விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி மீது வழக்கு

கோப்புப் படம்: தினமணி

04 Nov 2026 - 8:23 pm

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் இருந்து புனே நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நள்ளிரவு 12:26 மணிக்கு அந்த இண்டிகோ விமானம் புறப்பட்டது. அடுத்த 20 நிமிடங்களில் 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தில், ‘19டி’ என்ற அவசரகால வெளியேறும் பகுதியில் அமைந்துள்ள இருக்கையில் அமர்ந்திருந்த கௌரவ் சத்யேந்திர ரௌடேலா (33) என்ற பயணி, கதவைத் திறக்க முயன்றுள்ளார்.

பயணிகள் தவறுதலாகக் கதவைத் திறப்பதைத் தடுக்க அமைக்கப்பட்ட நெகிழிப் பாதுகாப்பு உறை அசைக்கப்பட்டதும், எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் விமானிகளும் பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாகச் செயல்பட்ட விமானப் பணியாளர்கள் அந்த பயணியைத் தடுத்து நிறுத்தினர்.

விமானம் புனே வந்தடைந்ததும், மற்ற பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி இண்டிகோ நிறுவனத்தின் மூத்த பாதுகாப்பு அதிகாரி விமான நிலைய காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்