பெங்களூரு: காவிரி விவகாரத்தைப் பேச்சுவார்த்தைமூலம் தீர்க்க தமிழக முதல்வர் விஜய் விரும்புவதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மேகதாது உட்பட கர்நாடக மாநில நீர்நிலைகளைத் தமிழக முதல்வர் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
தமிழினத்துக்குக் காவிரியிலிருந்து தொடர்ந்து 15 நாள்களுக்கு 3,500 கன அடி வீதம் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து கர்நாடகா அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகப்போவதாக தெரிவித்துள்ளது.
காவிரியில் இருந்து சிறிதளவு தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதல்வர் சிவகுமார், இதேபோன்ற தமிழக அரசின் கோரிக்கைகள் இருமுறை நிராகரிக்கப்பட்டிருப்பதாக நினைவூட்டினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சில விஷயங்களைப் பேசுவதற்குத் தமிழக தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதுடன் தம்மிடம் தொலைபேசியிலும் பேசியதாகக் குறிப்பிட்டுள்ள சிவகுமார், தமிழகக் குழுவை மரியாதையுடன் நடத்துவதும் அவர்களுக்குச் சேர வேண்டியதை வழங்குவதும் கர்நாடகாவின் கடமை என்றார்.
“காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வுகாண தமிழக முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார்.
“கர்நாடகாவில் உள்ள நீர்நிலைகளைப் பார்வையிட அவருக்கு என் தனி ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. அவருக்கு விளக்கம் அளிக்க வழக்கறிஞர்கள், அதிகாரிகள் குழுவும் தயார்நிலையில் உள்ளது,” என்றார் முதல்வர் சிவகுமார்.

