காவிரி விவகாரம்; பேச்சுவார்த்தைக்குக் கர்நாடகா செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்

காவிரி விவகாரம்; பேச்சுவார்த்தைக்குக் கர்நாடகா செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்

2 mins read
fd03291b-3afb-4c23-9931-c4d66932a466
காவிரி விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்குத் தமிழகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். - கோப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

பெங்களூரு: காவிரி நதி நீர் பங்கீடு, மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகம் சென்று அங்கு முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்துப் பேசவிருப்பதாக, தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் வினோத்தும், கர்நாடக துணை முதல்வரும், அமைச்சருமான ஜி. பரமேஷ்வரா இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், இதுதொடர்பான அதிகாரபூர்வத் தகவல்களை இதுவரை வெளியாகவில்லை.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு காவரி நீருக்காக பெங்களூரு சென்று பேச்சு நடத்தும் தமிழக முதல்வராக விஜய் இருப்பார்.

முன்னதாக, காவிரி விவகாரத்தைப் பேச்சுவார்த்தைமூலம் தீர்க்க திரு விஜய் விரும்புவதாக திரு சிவகுமார் கூறியிருந்தார்.

மேகதாது உட்பட கர்நாடக மாநில நீர்நிலைகளைத் திரு விஜய் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது திரு சிவகுமார் கூறினார்.

தமிழகத்துக்குக் காவிரியிலிருந்து தொடர்ந்து 15 நாள்களுக்கு 3,500 கன அடி வீதம் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து கர்நாடகா அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகப்போவதாக தெரிவித்துள்ளது.

காவிரியிலிருந்து சிறிதளவு தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட திரு சிவகுமார், இதேபோன்ற தமிழக அரசின் கோரிக்கைகள் இருமுறை நிராகரிக்கப்பட்டிருப்பதாக நினைவூட்டினார்.

காவிரி விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்குத் தமிழக தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதுடன் தம்மிடம் தொலைபேசியிலும் பேசியதாகத் திரு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகக் குழுவை மரியாதையுடன் நடத்துவதும் அவர்களுக்குச் சேர வேண்டியதை வழங்குவதும் கர்நாடகாவின் கடமை என்றார் அவர்.

“காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வுகாண திரு விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள நீர்நிலைகளைப் பார்வையிட அவருக்கு என் தனி ஹெலிகாப்டர் தயார்நிலையில் உள்ளது. அவருக்கு விளக்கமளிக்க வழக்கறிஞர்கள், அதிகாரிகள் குழுவும் தயார்நிலையில் உள்ளது,” என்றார் திரு சிவகுமார்.

குறிப்புச் சொற்கள்