தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பில் நால்வரைக் கைது செய்தது சிபிஐ

2 mins read
cdb5ccf3-2f23-43d3-a691-2e32e9ee9aba
சிபிஐ அதிகாரிகளால் மூன்று பால்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த இந்நால்வரும் கைதாகி உள்ளனர். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

ஹைதராபாத்: கடந்த ஆண்டு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பில், மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று பால்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த நால்வரை சிபிஐ தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.

புகழ்பெற்ற திருமலை லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்படும் பசு நெய்யில் கலப்படம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் விசாரணையில், திட்டமிட்டே கலப்படம் செய்துள்ள விவரங்கள் வெளிவந்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் உத்தரகாண்ட் மாநிலம், ரூர்க்கி நகரில் அமைந்துள்ள போலே பாபா பால்பண்ணையின் முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின், பொமில் ஜெயின், தமிழக மாநிலத்தின் பூனம்பாக்கம் வைஷ்ணவி பால்பண்ணையின் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வ வினய் காந்த் சாவ்டா, தெலுங்கானா மாநிலத்தின் துண்டிக்கல் பகுதியில் உள்ள ஏஆர் பால்பண்ணையின் எம்டி ராஜு ராஜசேகரன் ஆகியோர் அடங்குவர்.

நெய் விநியோகத்தின்போது கடுமையான முறையில் விதிமீறல்களும் ஒவ்வொரு கட்டத்திலும் முறைகேடுகளும் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

நெய் விநியோகம் செய்வதற்காக வைஷ்ணவி பால்பண்ணையின் பிரதிநிதிகள் ஏஆர் பால்பண்ணை என்ற பெயரில் ஏலக்குத்தகை எடுத்ததாக மத்திய புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரூர்க்கியில் உள்ள போலே பாபா பண்ணையில் இருந்து நெய் வாங்கியதாக பொய்யான பதிவுகளை வைஷ்ணவி டெய்ரி நிறுவனம் உருவாக்கி இருந்தது.

இவ்வளவு அதிக அளவிலான நெய்யை வழங்கும் திறன் போலே பாபா பால் பண்ணையிடம் இல்லை என்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்தக் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், முறைகேடுகளைக் கண்டறிந்து மூன்று பால் நிறுவனங்களைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதியில் வழங்கப்படும் மிகவும் புனிதமான லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக தெலுங்கு தேசம் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்தாண்டு அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதையடுத்து, மதத்தையும் அரசியலையும் ஒன்றாக கலந்ததைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

சிறப்புக் குழுவில் இரண்டு சிபிஐ அதிகாரிகள், இரண்டு ஆந்திரப் பிரதேச காவலர்கள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஆகிய ஐவர் இடம்பெற்றிருந்தனர்.

திருப்பதியில் உள்ள சமையலறையில் தினமும் சுமார் 1,500 கிலோ நெய், கிலோ கணக்கிலான முந்திரி பருப்புகள், திராட்சைகள், ஏலக்காய், கேழ்வரகு மாவு, சர்க்கரை ஆகியவை சேர்த்து ஏறக்குறைய மூன்று லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்