ரூ.980 கோடி கடன் மோசடி: ‘ஜீ’ நிறுவனா் சுபாஷ் சந்திரா மீது சிபிஐ வழக்குப்பதிவு

ரூ.980 கோடி கடன் மோசடி: ‘ஜீ’ நிறுவனா் சுபாஷ் சந்திரா மீது சிபிஐ வழக்குப்பதிவு

2 mins read
2a8bf697-d1da-4966-bd34-732cc2f61274
சுபாஷ் சந்திரா. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வீட்டுவசதி நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெறுவதற்காகத் தன் சொத்து மதிப்பை பொய்யாக உயர்த்திக் காட்டியதாக, ‘ஜீ’ நிறுவனா் சுபாஷ் சந்திரா மீது மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்துள்ளது.

மொத்தம் ரூ.980 கோடி கடன் பெறுவதற்கு அவர் அத்தகைய மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்திய ஊடகத் தளத்தில் வேகமாக முன்னேற்றம் கண்ட சுபாஷ் சந்திரா, பல்வேறு ஊடக நிறுவனங்களை நிறுவியவர். எனினும், பின்னாள்களில் தொழில் ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட அவர், ஒரு கட்டத்தில் நொடித்துப்போனார்.

தொலைக்காட்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோலோச்சிய அவரது தொழில் குழுமம், கடந்த 2018ல் நிதி நெருக்கடிக்குப் பின்னா் கடும் கடன் சுமையில் சிக்கியது.

நிறுவனங்களின் பங்குகள் சரிந்து பல வணிகங்கள் விற்கப்பட்ட நிலையில், தனிநபா் உத்தரவாதம் அளித்த தொழிலதிபா்களிடம் இருந்து வங்கிகள் கடன் தொகையை வசூலிக்கும் திவால் சட்ட நடைமுறையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில் அவரது நிறுவனங்களுக்கு ‘எல்ஐசி’ (LICHFL) நிறுவனம் மொத்தம் ரூ.980 கோடி கடன் வழங்கியது.

சுபாஷ் சந்திரா அளித்த உத்தரவாதக் கடிதங்கள், சொத்து மதிப்புச் சான்றிதழ்களின் அடிப்படையில் அக்கடன்கள் அனுமதிக்கப்பட்டன.

பின்னர் சுபாஷ் சந்திராவுக்கு எதிரான திவால் நடவடிக்கையின்போது, சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்ட அளவுக்குத் தன்னிடம் சொத்துகள் இல்லை என்று அவர் தெரிவித்தார். இதன்மூலம் கடன் பெறுவதற்காகப் போலியான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது தெரியவந்தது.

இந்த முறைகேடான கடனால் வட்டி, பிற கட்டணங்கள் சேர்த்து ரூ. 1,322 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எல்ஐசிஹெச்எஃப்எல் புகார் அளித்துள்ளது.

இதன் அடிப்படையில் சுபாஷ் சந்திரா, தொடர்புடைய நிறுவனங்களின் இயக்குநர்கள், சில அரசு ஊழியர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தாம் ஊடக நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கப்போவதாகவும் மீண்டும் புது நிறுவனம் தொடங்கி ஊடகத்துறையில் சாதிக்கப்போவதாகவும் சுபாஷ் சந்திரா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்