புதுடெல்லி: முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்து வந்த அரசு பங்களாவை அலங்கரிப்பதற்காக பெருந்தொகை செலவானதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருந்தன.
இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் டெல்லி அரசின் பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரம் வரை அக்குறிப்பிட்ட அரசு பங்களாவில் வசித்து வந்தார் கெஜ்ரிவால்.
அப்போது அந்த பங்களா ‘கண்ணாடி மாளிகை’ போல மாற்றப்பட்டதாகவும் அலங்கார வேலைப்பாடுகளுக்காக மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டதாகவும் பாஜக குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. இதையடுத்து, கெஜ்ரிவாலின் கண்ணாடி மாளிகை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக தாம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் ஏற்கெனவே இரு புகார்கள் அளித்திருந்ததாகவும் அவற்றின் பேரில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், டெல்லி அரசின் பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டதாகவும் பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.
“தற்போது அந்த அறிக்கையின் அடிப்படையில், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது,” என்றார் அவர்.