புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களை முடக்கிய மத்திய அரசு தற்போது 300க்கும் மேற்பட்ட சூதாட்டம் மற்றும் பந்தய செயலிகளுக்கும் இணையத் தளங்களுக்கும் தடை விதித்துள்ளது.
‘இணைய விளையாட்டு பந்தயத் தளங்கள், இணைய கேசினோ, ‘ரூலெட்’ (கழல் வட்டு) என்ற சட்டவிரோதச் சூதாட்டம் மற்றும் பந்தயம் தொடா்புடைய செயலிகள் அவை.
அவற்றை ஒரேயடியாக முடக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) தெரிவித்தன.
இணையச் சூதாட்டத்துக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்விவகாரம் குறித்து அறிந்த ஓர் அதிகாரியை மேற்கோள் காட்டி, அரசாங்கம் இதுபோன்ற சுமார் 8,400 இணையத்தளங்களை முடக்கியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அவற்றில் சுமார் 4,900 இணையத்தளங்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, அதிபர் திரௌபதி முர்முவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இணைய சூதாட்ட ஒழிப்புச் சட்டத்திற்குப் பிறகு முடக்கப்பட்டன.
அந்தச் சட்டம் 2025 அக்டோபர் 1 முதல் நடப்புக்கு வந்தது.

