டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய கலால் சட்டத் திருத்த மசோதா விரைவில் சட்டமாகவுள்ள நிலையில், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை மளமளவென உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக, சிகரெட்டுகளின் விலை 3 மடங்கு வரை அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.
தற்போது சிகரெட், ஹூக்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீது 28% ஜி.எஸ்.டி., கூடுதல் செஸ் வரி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், இப்பொருள்கள் மீது கூடுதல் கலால் வரி விதிக்கப்படவுள்ளது.
புகையிலைப் பொருட்கள் மீதான வரி 60 விழுக்காடு முதல் 70 விழுக்காடு வரை உயர்த்தப்படலாம்.
குறிப்பாக, 1,000 சிகரெட்டுகளுக்கான வரி ரூ.2,700 முதல் அதிகபட்சமாக ரூ.11,000 வரை அதிகரிக்க உள்ளது.
மெல்லும் புகையிலைப் பொருள்களுக்கான வரி 25 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடு வரையும், ஹூக்கா புகையிலைக்கான வரி 25 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு வரையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
பலவகை கலந்த சிகரெட் புகையிலைக்கான வரி 60 விழுக்காட்டிலிருந்து 325 விழுக்காடு வரை, அதாவது கிட்டத்தட்ட 5 மடங்கு வரை உயரக்கூடும்.
சிகரெட்டின் நீளம், வகைக்கு ஏற்ப இந்த விலை உயர்வு இருக்கும். புகையிலை நுகர்வைக் குறைப்பது, மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த வரி உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிகரெட் விலை கணிசமாக உயருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் பெருமளவு குறையும் எனச் சுகாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

