மூன்று மாநிலங்களில் ஆட்சி மாற்றம்; ஆளும் கட்சிகளுக்கு ஏமாற்றம்

மூன்று மாநிலங்களில் ஆட்சி மாற்றம்; ஆளும் கட்சிகளுக்கு ஏமாற்றம்

2 mins read
280a8609-b260-4009-a41b-c5fe9f6562b2
கேரளாவில் இன்றுவரை எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட நிலையில் கொச்சியில் அந்தக் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வெற்றியைக் கொண்டாடினர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தல்களில் மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் பாஜக தனது ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அதேபோல, புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசுடனான கூட்டணி அரசாங்கமும் இத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தொடருகிறது.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்த மூன்று மாநிலங்களில் மேற்கு வங்காளத்திலும் தமிழ்நாட்டிலும் இதுவரை ஆட்சி புரியாத இரு கட்சிகள் தங்களது முதல் அரசாங்கத்தை அமைக்க உள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் 15 ஆண்டுகாலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி உருவாகிறது. அந்த மாநிலத்தில் மம்தாவின் கடும் எதிர்ப்பு அரசியலை எதிர்கொண்டு படிப்படியான முன்னேற்றத்தை பாஜக கண்டு வந்தது.

294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 2021 தேர்தலில் 215 தொகுதிகளில் வென்ற திரிணாமூல் காங்கிரஸ் இம்முறை 100 இடங்களுக்குக் குறைவான இடங்களையே பெற்றுள்ளது.

அதேவேளை, கடந்த தேர்தலில் 77 இடங்களில் வென்ற பாஜக தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 147 இடங்களையும் கடந்து முன்னணியில் இருந்தது. சிங்கப்பூர் நேரம் இரவு 10 மணி நிலவரப்படி, 55 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக 149 தொகுதிகளில் முன்னணியில் இருந்தது. திரிணாமூல் காங்கிரஸ் 26 இடங்களில் வென்று 57 இடங்களில் முன்னணியில் இருந்தது. அதனால் அங்கு ஆட்சி மாற்றம் உறுதியாகிவிட்டது.

தமிழ்நாட்டில் நடிகர் விஜய்க்கு ஆதரவான பேரலையால் இதுவரை அதிமுக, திமுக என்னும் இருதுருவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது. ஏறத்தாழ ஐம்பதாண்டு காலத்துக்குப் பின்னர் அங்கு பெரியதோர் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

மற்றொரு மாநிலமான கேரளாவில் பத்தாண்டு காலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அங்கு வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்தக் கூட்டணி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மூன்று மாநிலங்களிலும் அரசாங்க எதிர்ப்பு அலை மறைமுகமாக இருந்ததையே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

ஆனாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கட்சி ஆட்சி அமைக்கிறது. மேற்கு வங்கத்தில் பாஜகவும் தமிழ்நாட்டில் தவெகவும் முதல்முறை ஆட்சி அமைக்கின்றன. அதேநேரம் கேரள மாநில காங்கிரஸ் கட்சி பத்தாண்டுகளுக்கு முன்னர் பறிகொடுத்த வெற்றியை மீட்டெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்