ஹைதராபாத் - சென்னை புல்லட் ரயில் பாதையில் மாற்றம்

ஹைதராபாத் - சென்னை புல்லட் ரயில் பாதையில் மாற்றம்

2 mins read
381ab8b2-a5e2-467e-868e-c921ff928eef
திருத்தப்பட்ட புதிய வழித்தடத்தின்மூலம், தெலுங்கானா மாநிலத்திற்குள் திட்டத்தின் நீளம் 236 கிலோமீட்டரிலிருந்து 123 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.  - மாதிரிப்படம்: என்டிடிவி

ஹைதராபாத்: பெங்களூரு - ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டத்தைத் தொடர்ந்து, தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஹைதராபாத் - சென்னை அதிவேக ரயில் பாதை கட்டமைப்பிலும் இந்தியாவின் தேசிய அதிவேக ரயில் வழித்தட நிறுவனம் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.

திருத்தப்பட்ட புதிய வழித்தடத்தின்மூலம், தெலுங்கானா மாநிலத்திற்குள் திட்டத்தின் நீளம் 236 கிலோமீட்டரிலிருந்து 123 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. அது மாநில அரசின் எதிர்கால நகரம், உள்நாட்டுக் கொள்கலன் முனையம் ஆகிய வளர்ச்சித் திட்டங்களோடு ஒத்துப்போகும் வகையில் மாற்றிமைக்கப்பட்டுள்ளது.

முன்னைய திட்டத்தின்படி, அந்த ரயில் பாதை ஷம்ஷாபாத், பாட்டசிங்காரம், நார்கெட்பள்ளி, சூர்யபேட்டை, கம்மம் வழியாகச் செல்லவிருந்தது. ஆனால், தற்போதைய புதிய திட்டத்தின்படி ஷம்ஷாபாத், எதிர்கால நகரம், உள்நாட்டுக் கொள்கலன் முனையம், ஹாலியா, வடபள்ளி வழியாகச் செல்லும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஆய்வுகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் நல்கொண்டா மாவட்டத்தில் மட்டும் உள்நாட்டுக் கொள்கலன் முனையம், ஹாலியா, வடபள்ளி என மூன்று நிலையங்கள் அமையவுள்ளதாக ‘டெக்கான் கிரானிக்கல்’ செய்தி தெரிவிக்கிறது.

கடற்கரை இல்லாத தெலுங்கானா மாநிலத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உள்நாட்டு வணிக மையமான உள்நாட்டுக் கொள்கலன் முனையப் பகுதியில் புல்லட் ரயில் நிலையத்தை அமைப்பது சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்த உதவும் எனக் கூறப்படுகிறது.

இந்த அதிவேக ரயில் கட்டமைப்பின் முக்கிய நிர்வாகக் கட்டுப்பாட்டு மையமும் முதன்மைப் பராமரிப்புப் பணிமனையும் ஷம்ஷாபாத்தில் அமைக்கப்படவுள்ளன. அது ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு, சென்னை, புனே நோக்கிச் செல்லும் புல்லட் ரயில் சேவைகளுக்கான மத்தியக் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படும்.

விமான நிலைய விரிவாக்கப் பணிகள் காரணமாக, ஷம்ஷாபாத் அனைத்துலக விமான நிலைய முனையத்திலிருந்து கிட்டத்தட்ட 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் புல்லட் ரயில் நிலையம் அமையவுள்ளது. இந்தத் தொலைவை இணைக்க ‘மோனோ ரயில்’ முறையைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்