இந்தியாவில் மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் மாற்றம்

இந்தியாவில் மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் மாற்றம்

1 mins read
5d790813-1d6c-4d79-b217-afa9cdb95431
மார்ச் 1 முதல் ‘சிம் பைண்டிங்’ (SIM binding) எனப்படும் புதிய விதிமுறை கட்டாயமாக்கப்படுகிறது. - மாதிரிப்படம்: பிக்சாபே

புதுடெல்லி: இந்தியாவில், மார்ச் 1 முதல், ‘சிம் பைண்டிங்’ (SIM binding) எனப்படும் புதிய விதிமுறை காரணமாக, பயனர்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளை முன்பு போல பயன்படுத்த முடியாமல் போகலாம்.

தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவுகளின்படி, சிம் அட்டை சாதனங்களில் இருக்கவேண்டும். அது செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே தகவல்தொடர்புத் தளங்கள் இயங்கும். 

கைப்பேசியிலிருந்து சிம் அட்டையை அகற்றினாலும், இணைக்கப்பட்ட சாதனங்களில் செயலிகள் தொடர்ந்து இயங்கும் தற்போதைய முறையைக் காட்டிலும், அது ஒரு பெரிய மாற்றம்.

இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் மோசடிகளைத் தவிர்க்கவும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறையின்கீழ், கணக்கைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் சிம் அட்டை தொடர்ந்து கைப்பேசியில் இருக்கிறதா என்பதைச் செயலிகள் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.

அப்படி சிம் அட்டை அகற்றப்பட்டாலோ மாற்றப்பட்டாலோ செயலிழந்தாலோ, அசல் சிம் அட்டையை மீண்டும் போட்டு அது அங்கீகரிக்கப்படும்வரை அந்தக் கணக்கு செயல்படாமல் போகலாம்.

செயலிழந்த அல்லது மோசடியாகப் பெறப்பட்ட கைப்பேசி எண்களைப் பயன்படுத்தி நடக்கும் இணைய மோசடிகளைத் தவிர்க்க, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தொலைத்தொடர்புத் துறை தெரிவித்தது.

செயல்பாட்டில் உள்ள சிம் அட்டையுடன் கணக்குகளை இணைப்பதால், குற்றவாளிகளைக் கண்டறிவது எளிதாகும்; தகவல்தொடர்புத் தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறையும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்