ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ரசாயனம் ஏற்றப்பட்ட இரண்டு லாரிகள் மோதி தீப்பிடித்ததில் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) அதிகாலை 5.30 மணியளவில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் பங்ரோதா அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
அங்கு 40க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.
ரசாயனம் ஏற்றியிருந்த டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் நிரப்புவதற்காக அந்த பெட்ரோல் நிலையத்துக்கு வந்தது. அப்போது, அந்த ரசாயன டேங்கர் லாரி அங்கு நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி மீது மோதியது.
இரண்டு லாரிகளும் மோதிய வேகத்தில் ரசாயன லாரியில் தீப்பிடித்தது. அந்தத் தீ எரிவாயு டேங்கர் லாரிக்கும் பரவியது. இதனால் எரிவாயு நிரப்பப்பட்டிருந்த லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
அந்தத் தீப்பொறி பெட்ரோல் நிலையத்தில் இருந்த மற்ற டேங்கர் லாரிகள்மீது விழுந்தது. இதனால் அந்த லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.
லாரிகளில் பிடித்த தீ, பெட்ரோல் நிலையத்துக்கும் பரவி 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தீப்பிழம்புகள் வெளியானது. இதனால், அந்தப் பகுதியே கரும்புகையாகக் காட்சியளித்தது.
அங்கிருந்த டேங்கர் லாரி ஓட்டுநர்களும் பெட்ரோல் நிலைய ஊழியர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
தொடர்புடைய செய்திகள்
40க்கும் மேற்பட்டவர்கள் புகை மூட்டத்திலும் தீப்பிடித்த லாரிகளிலும் சிக்கிக்கொண்டனர் என்று தினத்தந்தி உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்தன.
தகவல் அறிந்து அங்கு வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தன. ஆனால் அதற்குள் எட்டுப் பேர் கருகி பலியாகிவிட்டனர்.
தீக்காயங்களுடன் 37 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து காவல்துறையினரும் நிர்வாகக் குழுவினரும் உயிர் பிழைத்தவர்களை மீட்டு சாவாய் மன் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பயங்கர தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் முழுமையாக எரிந்து சாம்பலாகி விட்டன. பெட்ரோல் நிலையத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே முதல்வர் பஜன் லால் ஷர்மா, எஸ்எம்எஸ் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
“நான் மருத்துவமனைக்குச் சென்றேன். காயம் அடைந்த அனைவரையும் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன். அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்,” என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் முதல்வர் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் ஷர்மாவுடன் தொடர்புகொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் தீ விபத்துச் சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.