சென்னை: சென்னையில் அனுமதியின்றி நாட்டப்படும் பதாகைகளுக்கு மார்ச் 7ஆம் தேதியிலிருந்து 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பெருநகரச் சென்னை மாநகராட்சி திங்கட்கிழமை (மார்ச் 2) அறிவித்துள்ளது.
கட்டட உரிமையாளர்களும் விளம்பர நிறுவனங்களும் பதாகைகளை நாட்ட மார்ச் 7ஆம் தேதிக்குள் உரிய அனுமதியைப் பெறும்படி மாநகராட்சி தெரிவித்தது.
பதாகைகளை நாட்டுவதற்குத் தனது அதிகாரபூர்வ இணையத்தளம் வழி மாநகராட்சி ஆணையர் ஜே குமரகுருபரனுக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவேண்டும் என்று பெருநகரச் சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டது.
அந்த விண்ணப்பத்தை மாநகராட்சியில் உள்ள குழு ஒன்று மதிப்பீடு செய்யும் என்ற மாநகராட்சி, அனைத்து நிபந்தனைகளும் பூர்த்திசெய்யப்பட்டு கட்டணங்கள் செலுத்தப்பட்ட பிறகு பதாகைகளுக்கான உரிமங்கள் வழங்கப்படும் என்றது.
பதாகைகள் அசையக்கூடியதாக இல்லாமல் நிலையாக இருக்கவேண்டும். பதாகையின் அளவு 10 மீட்டர் அல்லது இரண்டு மாடி உயரத்துக்குள் மட்டும் இருக்கவேண்டும் என்பது நிபந்தனைகளில் அடங்கும்.

