சென்னையிலிருந்து மும்பைக்குச் சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானத்துக்கு சனிக்கிழமை (ஜூன் 1) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு (6E 5314) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
“விமானம் மும்பையில் தரையிறங்கியவுடன், விமானப் பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினர். பாதுகாப்பு அமைப்புகளின் வழிகாட்டுதலின்கீழ், விமானம் தனி இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது,” என்று தெரிவித்தது.
விமானத்தில் 172 பயணிகள் இருந்தனர். வெடிகுண்டு மிரட்டல் குறித்து மும்பை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் சொன்னதை அடுத்து, விமானத்துக்கு “முழு அவசரநிலை” அறிவிக்கப்பட்டது.
அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்த இண்டிகோ, அந்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறியது.
“அனைத்து பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகு, அந்த விமானம் முனையப் பகுதிக்குக் கொண்டு செல்லப்படும்,” என்று இண்டிகோ சொன்னது.