ஹைதராபாத்: தெலுங்கானா மருத்துவமனையின் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய தம்பதி ரூ.35 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக இரு மருத்துவர்கள் உள்பட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செகுந்தராபாத் நகரில் செயல்பட்டு வந்த கருவுறுதல் மையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
வாடகைத் தாய் மூலம் ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய தம்பதியரிடம், ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தையை ரூ.90,000க்கு வாங்கி வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தை என்று ஏமாற்றி மருத்துவமனை ரூ.35 லட்சம் வாங்கியுள்ளது.
அந்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நடத்தி வந்த மேலும் மூன்று மருத்துவமனைகளும் மூடப்பட்டுவிட்டன.
அந்த மருத்துவமனையில் வாடகைத் தாய் மூலம் குழந்தைபெற்ற மற்ற தம்பதிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்படவிருக்கிறது.
முதற்கட்ட விசாரணையில், வழக்கில் கைதான டாக்டர் நம்ரதா என்பவர்மீது இரு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஒருமுறை, அமெரிக்க தம்பதி வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தை, அவர்களது குழந்தை இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள்வரை உரிமம் ரத்து செய்யப்பட்டது. அது போன்று மற்றொரு வழக்கிலும் அவரது பெயர் இடம்பெற்றிருந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் பெயரில் ஏற்கெனவே மூன்று இடங்களில் பத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கருவுற்றிருக்கும் ஏழைத் தாய்மார்களை மூளைச்சலவை செய்து, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பணம் கொடுத்து வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததுள்ளனர்.