பெங்களூரு: பிறந்து சில நாள்களே ஆன பச்சிளங் குழந்தையின் வயிற்றில் கரு வளர்ந்திருப்பது கர்நாடகாவில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகா, தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் இரண்டாவது முறையாக தாய்மை அடைந்தார். இதையடுத்து, அண்மையில் பிரசவத்துக்காக ஹுப்பள்ளியில் உள்ள ‘கேஎம்சிஆர்ஐ’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 23ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், குழந்தையின் உடலில் சில மாற்றங்கள் தென்பட்டதால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண் மருத்துவர்களிடம் விவரம் தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தைக்கு உடனடியாக ‘அல்ட்ரா சவுண்ட்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அக்குழந்தையின் வயிற்றில் நன்கு வளர்ந்த முதுகெலும்புடன் ஒரு கரு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்த மருத்துவர்கள், அக்குழந்தைக்கு அடுத்தகட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த அரிதான நிகழ்வை மருத்துவ உலகில், ‘கருவுக்குள் கரு’ என்று குறிப்பிடுகிறார்கள். இது பச்சிளங் குழந்தையின் உடலுக்குள் ஏற்பட்ட இயல்பற்ற வளர்ச்சி என்றும் கூறப்படுகிறது.
புதிதாகப் பிறக்கும் ஐந்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இவ்வாறு ஏற்படக்கூடும். இதுபோல் நடப்பது அரிது.
பொதுவாக இவ்வாறு உருவாகும் கரு, ஒரு சிறு கட்டியைப் போல் வயிற்றுக்குள் காணப்படும். கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 32 வயது பெண்மணி, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, அதன் வயிற்றுக்குள் கை, கால்கள் வளர்ச்சி அடைந்த நிலையில் இரண்டு கருக்கள் காணப்பட்டன.
“குழந்தை பிறப்பதற்கு முன்பே இவ்வாறு இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. இத்தகைய குழந்தைகளுக்கும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. குழந்தையின் தாய் தற்போது நலமாக உள்ளார்,” என ‘கேஎம்சிஆர்ஐ’ மருத்துவமனை தெரிவித்துள்ளது.