தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்லைப்பகுதி குறித்து சீனா, இந்தியா உயர்மட்ட ராணுவப் பேச்சுவார்த்தை

2 mins read
e8617b0a-b380-4662-b6f0-54b39654b719
எல்லைப் பகுதியில் நிலைத்தன்மையைக் கட்டிக்காப்பது குறித்து இந்தியா, சீனா ராணுவங்கள் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தின. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

பெய்ஜிங்: சீனாவும் இந்தியாவும் பகிர்ந்துகொள்ளும் எல்லைப்பகுதி குறித்து இரு நாட்டு ராணுவங்களும் 23வது கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. தற்போதுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி எந்தவொரு நிலப் பிரச்சினையையும் தீர்த்துக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாகச் சீனாவும் இந்தியாவும் புதன்கிழமை (அக்டோபர் 29) தெரிவித்தன.

இரு நாட்டு ராணுவ வீரர்களும் கொல்லப்பட்ட 2020ஆம் ஆண்டின் ராணுவ மோதலைத் தொடர்ந்து, இமயமலை எல்லைப் பகுதியில் ஏற்பட்ட ராணுவப் பதற்றத்தைக் குறைப்பது குறித்த மைல்கல் ஒப்பந்தத்தை புதுடெல்லியும் பெய்ஜிங்கும் 2024ஆம் ஆண்டில் எட்டின.

அதன்பின்னர், இரு நாடுகளும் நேரடி விமானச் சேவைகள், முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெுடுத்துள்ளன. அக்டோபர் 26ஆம் தேதி இந்தியப் பகுதியில் நடைபெற்ற உயர்மட்ட ராணுவப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் ராணுவ மற்றும் அரசதந்திர வழிகள் மூலம் தங்கள் பேச்சுவார்த்தையைத் தொடர ஒப்புக்கொண்டன என்று சீனாவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

“நிலைத்தன்மையை நிலைநாட்ட எல்லையில் உள்ள எந்தவொரு நிலப் பிரச்சினைகளையும் தீர்க்க தற்போதுள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையோரம், திபெத் பகுதியில் சீனா மிகப் பெரிய அளவிலான புதிய விமானப்படைத் தளம் ஒன்றை அமைத்திருப்பதால், இரு நாடுகளிடையே மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள வேளையில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் முக்கியப் பகுதியான தவாங்கில் இருந்து 107 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த விமானத் தளம், இந்தியாவிற்கு நேரடி பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. போர் விமானங்கள், அதிநவீன ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) எல்லையில் குவித்து, தாக்குதல் நடத்துவதற்கான கால அவகாசத்தை சீனா வெகுவாகக் குறைத்துள்ளது. அடுத்த முறை ஏதேனும் மோதல் ஏற்பட்டால், சீனாவின் போர் விமானங்கள் அங்கிருந்தே இயக்கப்படும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

இந்தப் பகுதிக்குத் தேவையான வெடிமருந்துகள், எரிபொருளை அவர்கள் ஏற்கெனவே சுரங்கங்களில் சேமித்து வைத்திருக்கக்கூடும் என்று இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமை தளபதி பி.எஸ். தனோவா எச்சரித்துள்ளார். இந்த விமானத் தள மேம்பாடு, சீனாவின் எதிர்காலப் போர்த் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதுடன், இந்தியாவிற்குக் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது என விமானப்படையின் முன்னாள் துணைத் தலைவர் அனில் கோஸ்லா தெரிவித்துள்ளார்.

அண்மைய செயற்கைக்கோள் படங்கள், லுன்சே தளத்தில் சிஎச்-4 ரக தாக்குதல் டிரோன்கள் நிறுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளன.

குறிப்புச் சொற்கள்