புதுடெல்லி: அரசதந்திர நடவடிக்கைகள் மூலம் இந்திய, சீன உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் சீனாவின் அண்மைய செயல்பாடுகள் அமைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கின் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் ஏற்கத்தகாதவை என்றும் இந்தியா விமர்சித்துள்ளது.
இதனால் வட்டார அளவிலான அரசதந்திர நடவடிக்கைகளில் பரவலாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவின் ஓர் அங்கமாக உள்ள இடங்களுக்குப் புனைப்பெயர்களைச் சூட்டுவதற்கான சீனத் தரப்பின் எந்தவொரு விஷமத்தனமான முயற்சிகளையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது என்றார்.
இந்தியா, சீனா இடையேயான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நிர்வாக நடவடிக்கைகள் குறித்து புதுடெல்லியின் நிலைப்பாட்டை அவர் தெளிவாக விளக்கினார்.
ஆப்கானிஸ்தான், அருணாச்சலப் பிரதேசம் (இந்தியா) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) ஆகியவற்றின் எல்லைகளுக்கு அருகில் உள்ள தனது சின்ஜியாங் மாகாணத்தில் ஒரு புதிய மாவட்டத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்தியா இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது.
இந்தியாவுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு சீனா அண்மைக்காலமாக கற்பனைப் பெயர்களைச் சூட்டுவதாகவும், இத்தகைய நடவடிக்கையை இந்தியா நிராகரிப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை திரு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
பொய்க் கூற்றுகளை முன்வைப்பதற்கு ஆதாரமற்ற கதைகளை உருவாக்க சீனா மேற்கொள்ளும் இதுபோன்ற முயற்சிகள் உண்மையை மாற்றிவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், அருணாச்சலப் பிரதேசம் உட்பட சீனா உரிமை கொண்டாடும் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதிகளாக தொடர்ந்து நீடிக்கிறது என்றார்.
சீனத் தரப்பின் இந்தச் செயல்கள், இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளை நிலைப்படுத்தவும் இயல்பாக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குத் தடையாக உள்ளதாக திரு ஜெய்ஸ்வால் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இருதரப்பு உறவுகளைப் பாதிக்கும் இதுபோன்ற செயல்களில் இருந்து சீனா விலகியிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளுக்கு சீனா அவ்வப்போது சொந்தம் கொண்டாடி வருகிறது. சில பகுதிகளுக்கு நிர்வாக ரீதியில் பெயர் சூட்டி, சில கட்டுமானப்்்்்்் பணிகளையும் மேற்கொள்வதும் அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பதும் வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ‘சென்லிங்’ எனப் பெயரிடப்பட்ட புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்திருப்பதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இப்பகுதி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவற்றுக்கு அருகாமையில் இருப்பதால், குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
ஓராண்டுக்கும் சற்று அதிகமான காலத்தில், சின்ஜியாங்கில் சீனா ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்குவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக, சீன நிர்வாகத்தின்கீழ் உரிமை கோரப்படும் நிலப்பரப்பின் சில பகுதிகள் உண்மையில் காஷ்மீரின் லடாக் யூனியன் பிரதேசத்திற்குள் வருகின்றன என்று இந்தியா கூறியிருந்தது.
‘ஹியான்’, ‘ஹெகாங்’ மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கு புதுடெல்லி கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தது.

