இந்தியாவுடனான உறவுகள் மேம்படுவதற்கேற்ற சூழலை இணைந்து உருவாக்க இணக்கம்: சீனா

2 mins read
c4cc10da-cd47-460a-9a1c-410d661fea95
ரஷ்யாவில் செப்டம்பர் 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்திய (இடமிருந்து) சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். - படம்: ஊடகம்

புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட நான்கு பகுதிகளில் இருந்து இந்தியா தனது துருப்புகளை திரும்பப் பெற்றுள்ளதாக சீனா கூறியுள்ளது.

எல்லையோரப் பகுதிகளில் இருந்து துருப்புகளை திரும்பப் பெறுவதில் நிலவி வந்த பிரச்சினைகளில் 75 விழுக்காட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதையடுத்து, சீனாவும் தன் பங்குக்கு கருத்து தெரிவித்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு, கிழக்கு லடாக் உள்ளிட்ட பகுதிகளில இருந்து இந்தியா தனது படைகளைத் திரும்பப் பெற்றதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையோர நிலவரம் மேலும் சுமூகமடைந்து, கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சீனா கூறியுள்ளது.

இருதரப்பு உறவுகள் மேலும் மேம்படுவதற்கு ஏற்ற சூழலை இரு நாடுகளும் இணைந்து உருவாக்க ரஷ்யாவில் நடந்த சந்திப்பின்போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் (Mao Ning) கூறினார்.

“கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோகலை அமைச்சர் வாங் யி (Wang Yi),

அண்மையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் சந்தித்துப் பேசினார்.

“அப்போது, எல்லையோர விவகாரங்கள் குறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டது.

“அப்போது இரு நாட்டுத் தலைவர்களால் பொதுப்புரிந்துணர்வின் அடிப்படையில், எட்டப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்தவும் இந்த நோக்கத்திற்காக தொடர்பைப் பேணவும் ஒப்புக்கொண்டனர்,” என்று மாவோ கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு லடாக் பகுதியில் இரு நாட்டு எல்லையில், இருதரப்பும் படைகளை குவித்ததால் இந்தியா, சீனா இடையே பெரும் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், இருதரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில், இரு நாடுகளும் செயல்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த மாவோ, இருதரப்பிலும் நான்கு முக்கியமான எல்லைப் பகுதிகளில் இருந்து துருப்புகள் பின்வாங்கப்பட்டிருப்பது சாத்தியமாகி உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

பொதுவாக, சீனாவுக்கும் இந்தியாவுக்குமான எல்லைப் பகுதி நிலைமை ஸ்திரமாகவும் (நிலையாக) கட்டுக்குள் இருப்பதாகவும் மாவோ கூறினார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் திரு.ஜெய்சங்கர், வெள்ளிக்கிழமையன்று சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஓர் கலந்துரையாடலின்போது, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா, சீனா இடையேயான மோதல், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் முழுமைத்தன்மையை முற்றிலுமாக பாதித்தது என்றார்.

“இந்தியா, சீனா இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏறத்தாழ எல்லை சார்ந்த பிரச்சினைகளில் 75%க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பாக நாம் மேலும் சிலவற்றைச் செய்ய வேண்டியுள்ளது,” என்றார் ஜெய்சங்கர்.

குறிப்புச் சொற்கள்